Saturday 20 July 2013

ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் தவிரவும்  ஜோ’டி.க்ரூஸ்,பார்வதி மேனன், பெல்ஜிய சினிமோட்டோகிராபர் என்று ஆர்வமூட்டக்கூடிய ஒரு குழுவிடமிருந்து வெளிவந்திருக்கிறது மரியான். வரிசை கட்டி விடப்பட்ட டீஸர்களும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தன. 

இதே களத்தில் நீர்ப்பறவை கடல் ஆகியவை சமீபத்தில் தான் வெளியாகி ஆசீர்வாதம் டீவியை வெள்ளித்திரையில் ஓட்டியிருந்தன. உள்ளூர அந்த பயம் கொஞ்சம் இருந்தபோதும் பரமபிதாவின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு படத்திற்கு போனேன். நல்லவேளையாக கர்த்தரை கலெக்டரின் கனவுகளிலேயே நிம்மதியாக இருக்கவிட்டிருக்கின்றனர். ஸ்தோத்திரம்.

கதை என்று பார்த்தால், துடிப்பான மீனவ இளைஞன் மரியான், அவனை விரட்டி விரட்டிக் காதலிக்கும் அதே குப்பத்துப் பெண் பனிமலர். ஆரம்பத்தில் நாயகன் அவள் காதலை மறுதலித்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக லவ்விலே விழுந்து, கலந்து ஒரு பொசிசனுக்கு வருவதற்குள், ஒரு குட்டி திருப்பம். கடன் பிரச்சனையிலிருந்து பனி மலரையும் அவளது அப்பாவையும் மீட்க சூடானுக்கு 2 வருட காண்ட்ராக்டில் வேலைக்குச் செல்கிறான் மரியான். 2 வருடம் முடிந்து அடுத்தவாரம் நாடு திரும்பலாம் என்றிருக்கையில் சூடானில் அரசுக்கு எதிரான தீவிரவாதக் குழு ஒன்றினால் மரியானும் இன்னுமிருவரும் கடத்தப்படுகின்றனர். மரியான் பணி புரிந்த கம்பெனியிடம் பேரம் செய்து பணம் பெற முயற்சிக்கும் அக்குழுவிடமிருந்து மரியான் தப்பிப்பது மீதி.

தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது  போராடி இருக்கிறார் . ஆகவே நேரடியாக பார்வதிக்கு சென்றுவிடலாம். கேரளா கல்வி முறையில்  5ங்கிளாஸிலிருந்து பெண்களுக்கு மட்டும் ஏக்டிங் கோர்ஸ் எதுவும் சிலபஸில் வைத்திருக்கிறார்களா என்று விசாரிக்க வேண்டும்.  பூவில் மொட்டு போல இருந்தார். மரியானில் தான் விரிந்திருக்கிறார் ( உச்சு கொட்டுங்கய்யா! ) . தன்னம்பிக்கை ததும்பும் அழகு.  வழக்கமாக தமிழ் படங்களில் காதல் காட்சிகளில் தமன்னா ஹன்சிகா போன்ற மைதாமாவு நடிகையர் திலகங்கள்  வந்தாலே மிளகு ரசம் குடித்தாற் போல் குளு குளுவென்று இருக்கும்; ஆனால் பார்வதி ஸ்க்ரீனில் இருந்தால் கண்கள் இமைக்க மறந்துவிடுகின்றன. மேற்சொன்ன ந.தி.கள்  பார்வதியிடம்  ஒரு போசி வாங்கி பருக வேண்டும் மீன் குழம்பு.

சலீம் குமாரை கூட்டி வந்து சப்பை கேரக்டரைக் கொடுத்திருக்கிறார்கள். உமா ரியாஸுக்கும் பெரிதாக ஒரு வேலையுமில்லை படத்தில்.  இது போக அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, ஜெகன்னு ஒரு கூட்டமே இருக்கு. 
நெஞ்சே எழு பாட்டும், கடல் ராசா பாட்டும்  சூப்பரான சிச்சுவேசன்களில் பொருத்தப்பட்டிருக்கின்றன. விக்ரமனின் லாலாலா போல ஆங்காங்கே ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன’ போட்டிருக்கிறார்கள். பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் ரஹ்மான், ராஜா சார் போல் தான் டொக்காக வில்லை என்று நிரூபித்திருக்கிறார்.

கடல் படம் போலவே மீனவர் குப்பம் சார்ந்த கடல் பகுதியை கோவாவின் பீச் ரிசார்ட்டுகள் போல காட்டியிருந்தாலும் இதில் உறுத்தவில்லை. படம் முழுக்க ரிச் லுக். ஒளிப்பதிவில் எல்லாம்  நொட்டை சொல்லுமளவுக்கு நமக்கு அதில் ஆனா ஆவனா கூட தெரியாது  ஸோ  நெக்ஸ்ட்டுக்கு போவோம்.

சிங்கள கடற்படையினர் மீனவர்களைச் சுடுவது, ஆப்பிரிக்க எண்ணெய் வளத்தை பெரு நிறுவனங்கள் சுரண்டுவது போன்றவற்றை பட்டை ஊறுகாய் போல தொட்டுக்கொண்டிருக்கின்றனர்.  எல்லா வார்த்தைகளுக்குப் பின்னாலும் லே சேர்த்தால் டிஎன் 75 ஏரியாவின் நேட்டிவிட்டி வந்துவிடுமாம்.ஏனோ வசனங்கள் ஒட்டவே இல்லை. இமான் அண்ணாச்சிக்குத்தான் ஸ்லாங் பிரச்சனையே இல்லை.  மீனவ மக்கள் பேச்சு வழக்கு மிஸ்ஸானது கூட பரவாயில்லை. எளிய மக்களின் பயன் பாட்டிலில்லாத வசனங்களாக புழங்குகிறது இதில். காதல் போன்ற வார்த்தையை எல்லாம் யதார்த்த வாழ்க்கையில் யாரும் பயன் படுத்துகிறார்களா என்ன? ஆனால் நீரோடி குப்பத்தில் பேசுகிறார்கள்.  


பரத்பாலா என்றால் பரவாயில்லை. இலக்கிய வாதிகள் எல்லாம் உருவாக்கத்தில் இருந்திருக்கிறார்கள்.  வசனகர்த்தாவின் நாவல்களிரண்டுமே நெய்தல் நிலம் சார்ந்தது. பரதவர் வாழ்முறை குறித்து நிரம்பத் தெரிந்திருப்பவர் அவர். அதெல்லாம் தான் லைட்டா இடிக்கிது......

சூடான் எபிசோடில் வில்லன் சூப்பர். தம்மாத்துண்டு இருந்தாலும் டெரர் முகம். கிளைமேக்ஸ் ஃபைட்டுக்கு ஏகமாக லீடு கொடுத்துவிட்டு  ரொம்பச் சாதாரணமாக முடித்துவிட்டதால் ஆப்பிரிக்கா போர்ஷனை விட முதல் பாதி பெட்டர் என்று தோன்றிவிடுகிறது.  தனுஷுக்கான ஹீரோயிசக் காட்சிகள்னு பார்த்தா மூணு நாலு இருந்தாலே அதிகம். ஆனாலும் அதுவே மரியான கெத்தான கேரக்டரா காட்டிடுது.  

கொடுமையான பாலைவனத் துரத்தலின் முடிவில் கடலைப் பார்த்ததும் கண்கள் விரிய தனுஷ் ‘ஆத்தா’ எனும் காட்சி பட்டாசு.  துப்பாக்கி முனையில் சித்ரவதை செய்யும்போது ‘கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்’ என்று தனுஷ் பற்களை வெறுகிக் கொண்டு பாடுகையில் தியேட்டர் அதிர்கிறது.

தனுஷ் பார்வதி ரஹ்மான் மூவரும் மரியானுக்குத் தந்திருக்கும் உழைப்பின் சதவிகிதம் உச்சம்.  காதல் ஜோடிகள் சேரணும்னு ஆடியன்ஸ் ஏங்குற மாதிரி கதை நகரும் நல்ல லவ் சப்ஜெக்ட் படங்கள் வந்தே வருசக்கணக்காச்சு. ம்ம்ம் பாக்கலாம். கமர்சியலா என்ன ஆகும்னு தெரியல. ஆனா எனக்கு இந்தப்படம் போரடிக்கல.  பாவாடை சட்டை பனிமலருக்காக இன்னொரு வாட்டி கூட பாக்கலாம்னு இருக்கேன் :-)











உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு  கிழே  தெரிவிங்க   

0 comments: